தமிழக - கர்நாடக எல்லையான சாம்ராஜ்நகர் மாவட்டம், சொர்ணாவதி அணை அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ரூ. 2.80 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை கர்நாடக போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் - கர்நாடக எல்லையில் சொர்ணாவதி அணை உள்ளது. தமிழகத்தையொட்டி உள்ள கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், சொர்ணாவதி அணை தேசிய நெடுஞ்சாலையில் சாம்ராஜ்நகர் கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த கர்நாடக போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சரக்கு வாகனத்தில் கள்ளநோட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மாண்டியாவில் இருந்து வந்த சரக்கு ஆட்டோவை கர்நாடக போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ஆட்டோவில் இருந்த 4 பேரில் 3 பேர் தப்பியோடினர். அதில், மாண்டியா, மத்தூரைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து கர்நாடக போலீஸார் மேற்கொண்ட சோதனையில், கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் மொத்தம் 2.80 கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக, பிடிபட்ட கார்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாண்டியா அருகே மத்தூர் என்ற இடத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சொர்ணாவதி அணைக்கு கொண்டு வரப்பட்டதால் தமிழகம், திம்பம் வழியாக கேரளத்துக்குள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட கடத்தப்பட்டதா, எங்கு அச்சடிக்கப்பட்டது, இதில் தொடர்புடையை குற்றவாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக அவரைக் கைது செய்த போலீஸார் தப்பியோடிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, இரு மாநில எல்லையில் அமைந்துள்ள புளிஞ்சூர் சோதனைச் சாவடி, தமிழகத்தில் உள்ள ஆசனூர், பண்ணாரி சோதனைச் சாவடியில் தமிழக போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களை சோதனைக்குப் பின்னரே போலீஸார் அனுமதிக்கின்றனர்.