ஈரோடு

பருவாச்சியில் கல் குவாரியை மூடக் கோரி போராட்டம்

16th Aug 2019 06:46 AM

ADVERTISEMENT

பவானியை அடுத்த பருவாச்சியில் கல் குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 
பவானி ஊராட்சி ஒன்றியம், பருவாச்சி ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த குவாரியில் பாறைகளுக்கு வெடி வைக்கப்படுவதால் ஏற்படும் அதிர்வால் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருவதாகப் புகார் எழுந்தது. 
இதுகுறித்து, தொடர்ந்து பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து கடந்த மாதம் இக்குவாரியை மூடுமாறு வருவாய்த் துறையினர் உத்தரவிட்டனர். இந்நிலையில், ஓரிரு நாள்கள் மூடப்பட்ட இக்குவாரி மீண்டும் இயங்கியதாகக் கூறப்படுகிறது. 
இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதி மக்கள் கல் குவாரியிலிருந்து வியாழக்கிழமை பாரம் ஏற்றிக் கொண்டு வந்த இரு லாரிகளை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி வட்டாட்சியர் ஐ.பெரியசாமி, வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, கல் குவாரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இதையடுத்து, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தற்காலிகமாக கல் குவாரியின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு வருவாய்த் துறையினர் உத்தரவிட்டனர். இதனால், சமாதானமடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT