பைக்காரா அணை நிரம்பி அதன் உபரி நீர் மாயாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் தெங்குமரஹாடா கிராமத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணைக்கு முக்கிய நீர்வரத்தாக மாயாறு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை நீர் மாயாற்றில் கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து பவானிசாகர் அணையில் கலக்கிறது. இதன் ஆபத்தை உணராமல் தெங்குமரஹாடா மக்கள் பரிசலில் மாயாற்றைக் கடந்து பவானிசாகர் சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசலில் ஆற்றைக் கடக்கக் கூடாது என ஈரோடு, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் என உத்தரவிட்டனர். இதனால் இரு தினங்களாக தெங்குமரஹாடாவுக்குள் செல்வதும் அங்கிருந்து வெளியே போவதும் தடைபட்டது. தற்போது மாயாற்றில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் மீண்டும் பரிசலில் மாயாற்றைக் கடந்து ஊருக்குள் சென்று வருகின்றனர்.
தற்போது தெங்குமரஹாடா மலைப் பகுதியில் உள்ள பைக்காரா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் உபரி நீர் மாயாற்றில் திறந்துவிடப்படுகிறது. எந்த நேரத்திலும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்றும், பரிசல் பயணத்தை தவிர்க்குமாறும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் தெங்குமரஹாடா மக்களுக்கு ஊராட்சி சார்பில், தண்டோரா மூலம் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.