ஈரோடு புத்தகத் திருவிழாவில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் உள்ள அரங்குகளில் சிறுவர், சிறுமியரின் கூட்டம் அலைமோதியது.
ஒரு காலத்தில் சிறுவர்களுக்கென்று காமிக்ஸ் நூல்கள் தவிர வேறெந்த நூல்களும் கிடைக்காது. இப்போது சிறுவர் இலக்கியம் என்பது தனித்த ஒரு இலக்கியத் துறையாகவே வளர்ந்திருக்கிறது. குழந்தை இலக்கியத்திற்கென பால புரஸ்கார் என்ற பெயரில் சாகித்ய அகாதெமி ஒரு விருதையே வழங்குகிறது. தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்கள், அழகிய வண்ண அட்டைகள், ஓவியங்களோடு குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடுகின்றன.
தமிழில் 1950-60 இல் சிறார் இலக்கியம் செழிப்பாக இருந்ததாகவே தெரிகிறது. இடையில் ஏற்பட்ட சிறிய சுணக்கம் இப்போது மாறிவிட்டது. புதிய புதிய படைப்புகள், புதிய புதிய எழுத்தாளர்கள் உருவாகி வருகிறன்றனர். ஏராளமான சிறார் இலக்கியப் படைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இதில் அந்தோணியின் ஆட்டுக்குட்டி, ரயிலின் கதை, சிறுவர் கலைக்களஞ்சியம், எங்கிருந்தோ வந்தான், நல்ல நண்பர்கள், நெருப்புக்கோட்டை, வாசித்தாலும் வாசித்தாலும் தீராது, குட்டி இளவரசன், சிறுவர் நாடோடிக் கதைகள், பனி மனிதன், உலகின் மிகச்சிறிய தவளை, வாத்துராஜா, ஆமைகளின் அற்புத உலகம், மாயகடிகாரம், ஜிமாவின் கைபேசி, யானை சவாரி, அற்புத உலகில் ஆலிஸ், விரால் மீனின் சாகசப் பயணம், புத்தக தேவதையின் கதை போன்ற புத்தகங்களை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
ஆங்கிலத்தில் காமிக்ஸ் கல்வி, ஆய்வு, விளையாட்டு, விண்வெளி என்று பல்துறைகளில் வளர்கிறது. கிராபிக் நாவல் வளர்ச்சி கண்டுள்ளது.
தமிழில் கிராபிக் நாவல் ஒன்றிரண்டு மட்டுமே வந்துள்ளன. இவையும் போதிய கவனிப்புப் பெறவில்லை. காமிக்ஸ் புத்தகங்கள் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு என நமது மண்ணின் அடையாளங்களுடன் படைக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த புத்தகத் திருவிழாவில் கிராபிக் நாவல் வடிவில் வந்துள்ள கல்கியின் "பொன்னியின் செல்வன்' மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ஏராளமான மாணவர்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து கொடுமுடி அருகே தாமரைப்பாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பி.சண்முகசுந்தரம் கூறியதாவது:
பொன்னியின் செல்வன் நாவல் இன்றளவும் தொடர்ந்து பெரியவர்களைக் கவர்ந்து வரும் நிலையில் குழந்தைகள் அந்த நாவலை ரசிக்கத் தேவையான முயற்சியைப் பெரிதாக யாரும் எடுக்கவில்லை. குழந்தைகளும் இந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் இந்த நாவலை கிராபிக் வடிவில் வெளியிடக் காரணம். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது என்றுதான் கூற வேண்டும். பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் இந்த நாவலை வாங்கிச் செல்கின்றனர். பெரியவர்கள் பலரும் பொன்னியின் செல்வன் கிராபிக் நாவல் வாசகர்களாக மாறி வருகின்றனர். குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள் பலரும் இந்த கிராபிக் நாவலை படிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அடுத்த புத்தகத் திருவிழாவில் இந்த நாவல் கூடுதல் கவனம் பெற வாய்ப்புள்ளது என்றார்.