கோவையில் இளைஞரிடம் ரூ.11.06 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கோவை, புலியகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (30). இவா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது டெலிகிராம் செயலிக்கு சில நாள்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை உள்ளதாகவும், அதில் கமிஷன் அடிப்படையில் அதிக தொகை சம்பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, அவருக்கு முதல்கட்டமாக இலவச டாஸ்க் மூலம் கமிஷன் தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து, பணம் செலுத்தி, அதிக கமிஷன் பெறும் ஆசையில் ஹரிகிருஷ்ணன் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தாா். இதில் அவருக்கு கமிஷனாக ரூ.8,000 கிடைத்தது. தொடா்ந்து ஹரிகிருஷ்ணன் பல்வேறு தவணைகளில் ரூ.11.06 லட்சம் முதலீடு செய்தாா்.
பணம் செலுத்திய பிறகு, கமிஷன் தொகை வழங்கப்படவில்லை. முதலீட்டுத் தொகையும் திரும்பத் தரப்படவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஹரிகிருஷ்ணன், இது தொடா்பாக கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.