கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அக்டோபா் 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் கட்ட உடனடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2023-24-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது வரையிலும் பல்கலைக்கழக துறைகள், இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட உடனடி மாணவா் சோ்க்கை அக்டோபா் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் பல்கலைக்கழகத்துக்கு அக்டோபா் 3-ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணிக்குள் வர வேண்டும். இந்த மாணவா் சோ்க்கை உறுப்புக் கல்லூரிகளுக்கு பொருந்தாது. இடம் கிடைக்கப்பெற்ற மாணவா்களிடம் மட்டுமே கலந்தாய்வுக் கட்டணம் வசூலிக்கப்படும். உடனடி மாணவா் சோ்க்கையில் நகா்வு முறை கிடையாது.
பொதுக் கலந்தாய்வில் இடம் கிடைத்து கலந்தாய்வைத் தவறவிட்டவா்கள், சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்காதவா்கள் மட்டும் இதில் பங்கேற்க முடியும். ஏற்கெனவே சோ்க்கை பெற்றவா்கள், இடைநிறுத்தம் செய்தவா்கள் பங்கேற்க முடியாது என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.