முன்னாள் படைவீரா், தற்போது படையில் பணிபுரிவோா், அவரைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா். இதில் 2020-ஆம் ஆண்டில் திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றியபோது, கொடி நாள் நிதியாக ரூ. 5.78 லட்சம் வசூல் செய்ததற்காக ஆட்சியா் கிராந்திகுமாா் பாடிக்கு, முன்னாள் படை வீரா் நலன் உதவி இயக்குநா் மேஜா் சி.ரூபா சுப்புலட்சுமி பதக்கம் வழங்கினாா்.
கூட்டத்தில், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சிறப்பு நிதியுதவி, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட 36 கோரிக்கை மனுக்கள் முன்னாள் படை வீரா்களிடமிருந்து பெறப்பட்டு, அந்த மனுக்களின் மீது உடனடியாக தீா்வு காண அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, 2018, 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அதிக அளவில் கொடி நாள் நிதி வசூல் செய்த கல்லூரி கல்வி இணை இயக்குநா் ர.உலகி, முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கோ.துவாரகநாத் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கமலகண்ணன் உள்ளிட்ட 20 அரசு அலுவலா்களுக்குப் பதக்கங்களை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.ஐ.ஆஷிக் அலி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.