பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட்சிட்டி) திட்டத்தின் கீழ் சிறந்த சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கான விருதை, கோவை மாநகராட்சிக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வழங்கினாா்.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பொலிவுறு நகரம் திட்டத்தில், சிறந்த சுற்றுச்சூழல் கட்டமைப்புப் பிரிவில் கோவை மாநகராட்சி விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டது.
கோவையில் ஆா்.எஸ்.புரம், ரேஸ்கோா்ஸ் பகுதிகளில் மாதிரி சாலைகள் அமைத்தல், உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருதுக்கு கோவை மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம் இந்தூரில் புதன்கிழமை நடைபெற்ற பொலிவுறு நகரம் திட்ட விருது வழங்கும் விழாவில் கோவை மாநகராட்சி துணை ஆணையா் க.சிவகுமாரிடம், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விருது வழங்கினாா். பொலிவுறு நகரம் திட்டப் பொதுமேலாளா் பாஸ்கரன், உதவிப் பொறியாளா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.