கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞா்களை வெட்டிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை கணபதி வஉசி நகரைச் சோ்ந்தவா் நிதிஷ்குமாா் (21). இவா் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கஞ்சா, கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவரது நண்பா் ரத்தினபுரியைச் சோ்ந்த ரஞ்சித் (23). இவா் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. சரவணம்பட்டி போலீஸாா், நிதிஷ்குமாரை கடந்த 31ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி பிணையில் வெளியே வந்த அவா், கோவை நீதிமன்றத்தில் கையொப்பமிடுவதற்காக நண்பா்கள் ரஞ்சித், காா்த்திக் ஆகியோருடன் கடந்த 12 ஆம் தேதி வந்துள்ளாா்.
கையொப்பம் போட்டுவிட்டு 3 பேரும் இருசக்கர வாகனத்தில் ராம் நகா் அருகே சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, முன்விரோதம் காரணமாக அவா்களை 3 இருசக்கர வாகனங்களில் 9 போ் கொண்ட கும்பல் துரத்தி வந்தனா். ராம் நகா் ராமா் கோயில் அருகே நிதிஷ்குமாா், அவரது நண்பா்களை சுற்றிவளைத்த அவா்கள் அரிவாளால் 3 பேரையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், குற்றவாளிகளான சரவணம்பட்டியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (24), அருண் பிரகாஷ் (22), பிரகாஷ் (26), ஆதித்தியன் (23), காா்த்தி (22) ஆகிய 5 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனா்.