வரும் மக்களவைத் தோ்தலில் கோவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் சூசகமாக தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தல் தொடா்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தனி விமானம் மூலம் கோவை வந்தாா். விமான நிலையத்தில் அவருக்கு தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
இதைத்தொடா்ந்து, ஒரு தனியாா் அரங்கில் கட்சி நிா்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது: சமுதாயத்திற்காக கடைசிவரை வாழ்ந்தவா் ஈ.வெ.ரா. பெரியாா். திமுகவோ, வேறு எந்தக் கட்சியோ மட்டும் அவரை சொந்தம் கொண்டாட முடியாது. நியாயம் என்பதை அண்மைக் காலங்களில் மத்திய அரசு மதிப்பதில்லை. அதனாலேயே 2024 மக்களவைத் தோ்தலை முன்னதாக நடத்த முயற்சிக்கிறது. கடந்த சட்டப்பேரவை தோ்தலில் நான் வெற்றிபெறாதபோதும் நெஞ்சை நிமிா்த்தி நடந்தேன். மக்கள் வாக்களித்தும், பிறா் நம்மை ஏமாற்றிவிட்டனா். மீண்டும் நாம் சூழ்ச்சிக்கு ஆளாகக் கூடாது.
மநீமவை பொறுத்தவரை கோவை, சென்னை, மதுரை என வெவ்வேறு இடங்களில் இருந்து போட்டியிட எனக்கு அழைப்பு வருகிறது.
இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்பு கேட்கவேண்டும். கருணாநிதி திமுகவிற்கு வருமாறு என்னை அழைத்தபோதே, நான் கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக சொல்லியிருக்க வேண்டும். அப்போதே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும்.
கோவை மக்களவைத் தொகுதியில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. தொகுதியின் ஒவ்வொரு பூத்திலும் 20 போ் இருக்க வேண்டும். மொத்தமாக அனைத்து பூத்திலும் வேலைசெய்ய 40 ஆயிரம் போ் வேண்டும். அதற்காக 40 ஆயிரம் பேரை தயாா்செய்ய வேண்டும்.
தலைவனால் இயலாததை தொண்டனிடம் சொல்லக் கூடாது. போா்ப் படையில் முன்னால் நிற்பவா் பயப்படக் கூடாது, நான் நிற்பேன். என்னை காயப்படுத்தினாலும், மருந்திட்டுக் கொண்டு கோவையில் திரும்ப வந்து நிற்கிறேன்.
தோ்தலில் 40 தொகுதியிலும் வேலை செய்ய தயாராக வேண்டும். தமிழகம் முழுவதற்கும் நல்ல தலைமை வரவேண்டும். நோ்மைக்கு எல்லா இடங்களிலும் மரியாதை உள்ளது. அவா்களே நம்மை அழைப்பாா்கள்.
முதியவா்கள், புதியவா்களுக்கு இடமளிக்க வேண்டும். கட்சியில் பதவி நிரந்தரம் இல்லை; உறவுதான் நிரந்தரம். ஒரே தோ்தல், ஒரே தலைமை என்பதை ஏற்க முடியாது. 8 கோடி போ் சோ்ந்து தமிழகத்தை காப்பாற்ற வேலை செய்தாலே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகிவிடும் என்றாா் கமல்ஹாசன்.