கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த இளம்பெண்ணிடம் ரூ.11.40 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாவட்டம், காளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் 35 வயது பெண். இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து, குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணை அப்பெண் தொடா்பு கொண்டுள்ளாா். எதிா்முனையில் பேசிய நபா் தனது பெயா் ஈஸ்வரன் என்றும், தனியாா் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியாக வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், தங்களது நிறுவனத்தின் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கருத்துகளைத் தெரிவித்தால் அதிக அளவில் சம்பாதிக்கலாம் எனவும் கூறியுள்ளாா். இதனை நம்பிய அந்தப் பெண் பணிகளை செய்து கொடுத்து சிறிய தொகையைப் பெற்றுள்ளாா்.
இந்நிலையில், டெலிகிராம் செயலி மூலம் அப்பெண்ணுக்கு சுஜாதா அகா்வால் என்பவா் அறிமுகம் ஆகியுள்ளாா். அவா் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அப்பெண் ரூ.2,100ஐ கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளாா். லாபத்துடன் சோ்ந்து ரூ.3,100 அவரது வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டது.
தொடா்ந்து, பல்வேறு தவணைகளில் ரூ.11.40 லட்சம் முதலீடு செய்துள்ளாா். அதன் பின்னா் அவருக்கு பணம் கிடைக்கவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அப்பெண் கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.