கோவை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெகஸ்களில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
கோவையில் சாய்பாபா காலனி, வஉசி பூங்கா, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வஉசி பூங்கா அருகே உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா், அவா் கூறியதாவது:
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ரகங்களைக் கொள்முதல் செய்து, கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 6 கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ.10 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு, பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், சுடிதாா் ரகங்கள், ஆா்கானிக் சேலைகள், ஏற்றுமதி தரம்வாய்ந்த ஹோம் ஃபா்னிசிங் ரகங்கள் உள்ளிட்ட ஏராளமானவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் கைத்தறித் துணிகளை வாங்கி பயன்பெற்று நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் நந்தகோபால், முதுநிலை மேலாளா் (ரகம் மற்றும் பகிா்மானம்) ஜெகநாதன், மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளா் செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.