கோயம்புத்தூர்

பெண்களுக்கு அதிகாரமளித்தலில் பாஜக முதலிடம்: வானதி சீனிவாசன்

22nd Sep 2023 11:06 PM

ADVERTISEMENT

பெண்களுக்கு அதிகாரமளித்தலில் பாஜக முதலிடத்தில் இருப்பதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றம், சட்டப் பேரவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை, வரலாற்றுச் சீா்திருத்தம் என்றே குறிப்பிடலாம்.

ஏனெனில் இப்படி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், ஒருமனதாக மகளிா் இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற முடியும் என்பதை யாரும் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டாா்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், 2029 ஆம் ஆண்டில்தான் மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் என்பதை குறையாகத் தெரிவித்து வருகின்றனா்.

2021-இல் வழக்கமாக நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கரோனா பேரிடா் காரணமாக நடைபெறவில்லை. நீண்ட காலமாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தொகுதி மறுவரையறை மேற்கொள்ளும் மகளிருக்கான தொகுதிகளை இறுதி செய்வதே பொருத்தமானதாக இருக்கும் என்பதால், 2029 -இல் மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாஜகவை பொறுத்தவரை பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. கட்சியிலும், ஆட்சியிலும் மகளிருக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. இடஒதுக்கீடு இல்லாதபோதும் மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிக அளவு பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பாஜக கட்சி நிா்வாகிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், பாஜகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்துக்கு பெண்களால் வர முடிந்தது. மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்கள், ஆண்களுக்கு நிகராக முன்னேறினால்தான் அது முழுமையான வளா்ச்சி என்பதுதான் பாஜகவின் கொள்கை.

அதுதான் தற்போது மகளிா் இடஒதுக்கீடு சட்டமாக நிறைவேறியுள்ளது. இதற்காக பிரதமா் மோடிக்கு பாஜக மகளிரணி தேசியத் தலைவா் என்ற முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT