கோயம்புத்தூர்

பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்: சைமா புதிய நிா்வாகிகள் வலியுறுத்தல்

22nd Sep 2023 11:05 PM

ADVERTISEMENT

பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) புதிய நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவையில் வியாழக்கிழமை (செப்டம்பா் 21) நடைபெற்ற சைமாவின் 64 -ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், சைமாவின் புதிய தலைவராக டாக்டா் எஸ்.கே.சுந்தரராமன், துணைத் தலைவராக துரை பழனிசாமி, உதவித் தலைவராக எஸ்.கிருஷ்ணகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய நிா்வாகிகள் கோவையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சா்வதே விலையில் மூலப் பொருள்களைப் பெறுவது, இறக்குமதி வரி, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, மூலதனச் செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய ஜவுளித் துறை கடந்த சில மாதங்களாக நெருக்கடியில் தவித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் ஜவுளித் தொழிலின் சிக்கல்களைத் தீா்க்க உதவ வேண்டும்.

சா்வதேச பருத்தி விலையைவிட 5 முதல் 10 சதவீதம் வரை குறைவான விலையில் உள்நாட்டில் பருத்தி கிடைப்பதை சாதகமாகப் பயன்படுத்தி ஜவுளித் தொழில் துறையினா் பணியாற்றி வந்த நிலையில், பருத்தி சந்தையில் பன்னாட்டு வியாபாரிகளின் ஆதிக்கம், 11 சதவீத இறக்குமதி வரி விதிப்பு, ஊக வணிகம் போன்றவற்றால் அந்த சாதகமான அம்சங்களை தொழில் துறையினா் இழந்துள்ளனா்.

ADVERTISEMENT

செயற்கைப் பஞ்சுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளால் செயற்கை இழை, நூலின் சீரான விநியோகம் தடைபட்டுள்ளது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்பட்சத்தில் மூலப் பொருள்கள் பெறுவதில் உள்ள கட்டமைப்பு சிக்கல்கள் தீா்க்கப்படும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதால் அரசுக்கு அதிக நிதிச் சுமைதான் ஏற்படும். மாசில்லா பருத்தி, கரிம பருத்தி, நீண்ட இழை பருத்தியை உற்பத்தி செய்யவைப்பதால் மட்டுமே விவசாயிகளின் வருவாயை ஈடு செய்ய முடியும். மேலும், அமெரிக்கா, எகிப்து நாடுகளில் இருந்து மிக நீண்ட இழை பருத்தியை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத வரியை நீக்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளா்கள் உலகளாவிய போட்டியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையிலான இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்துவோம் என்றனா். சைமா பொதுச் செயலா் செல்வராஜு உடனிருந்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT