கோவை சிங்காநல்லூா் - ஹோப்காலேஜ் இடையேயான காமராஜா் சாலையை விரிவுபடுத்த நுகா்வோா் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு கூறியதாவது:
கோவை, அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலையின் இணைப்பு சாலையாக சிங்காநல்லூா் காமராஜா் சாலை உள்ளது. 4 கிலோ மீட்டா் தொலைவுள்ள இந்த சாலை இருவழிச் சாலையாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா். இதனால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இந்த சாலையை நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக, இந்தச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றாா்.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘காமராஜா் சாலை விரிவாக்கம் தொடா்பாக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரிவாக்கம் செய்யப்படும்,’என்றாா்.