போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் கோவையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் விவசாயிகள் பேசியதாவது:
வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்:
மாவட்டத்தில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மானவாரி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளுக்கான தீவனத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும், ஆழியாறு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும்.
நொய்யலை அளவீடு செய்து எல்லைக் கல் நட வேண்டும்:
வேளாண் உற்பத்தியாளா்களுக்குப் பயன்படும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து மைசூரு வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊராட்சிகளில் காலியாகவுள்ள கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
விவசாய நிலத்தை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு மற்றும் பாதிப்பில்லாத நீா்நிலைகளில் உள்ள விவசாயப் பயிா்களான தென்னை, பாக்கு போன்றவற்றுக்கு 2சி பட்டா வழங்க வேண்டும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில் புனமைக்கப்படும் நொய்யல் நதியை அளவீடு செய்து எல்லைக் கல் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிலவியல் வாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்றி பொதுமக்கள், விவசாயிகள் சென்றுவர வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். போலி பத்திரப்பதிவுகளை கட்டுப்படுத்தி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்.
தடுப்பணையை சீரமைக்க வேண்டும்:
வைதேகி தடுப்பணையில் இருந்து வரும் தண்ணீா் மூலம் 400 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில், தடுப்பணை சேதமடைந்துள்ளதால் கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீா் வீணாக நொய்யலில் கலக்கிறது. இதனால், 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே, இந்த தடுப்பணையை சீரமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
நரசிபுரம் பகுதியில் உள்ள தடுப்பணைகளைத் தூா்வாரவும், அணையில் உள்ள வண்டல் மண்ணை எடுத்துகொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிலரின் பொய்யான புகாரால் வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் மண் எடுக்க விவசாயிகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.
ஆவினில் பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்:
பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டா் பாலுக்கு ஆவின் நிா்வாகம் சாா்பில் ரூ.35 வழங்கப்படுகிறது. ஆனால், தனியாா் பால் நிா்வாகம் சாா்பில் ரூ.40 முதல் ரூ.45 வரை வழங்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பலா் தனியாா் நிா்வாகத்திடம் பாலை விற்பனை செய்கின்றனா்.
எனவே, ஆவினில் விவசாயிகளிடம் இருந்து கூடுதல் விலைக்கு பால் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்காநல்லூா் குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் ஒயா் உள்ளிட்ட பொருள்களை திருடும் சம்பவம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 54 திருட்டுச் சம்பங்கள் நடைபெற்றுள்ளன. இதைத் தடுக்க சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.