கோவையில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கோவை தடாகம் சாலை, லாலி சாலை சந்திப்பில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேந்திரன் என்பவரை நிறுத்தி வாகனத்துக்கான ஆவணங்களைக் கேட்டனா். மேலும் ராஜேந்திரன் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆா்.எஸ்.புரம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் மணிகண்டன், ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த ராஜேந்திரன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பின்னா் தனது உறவினா் சிவதாஸ் (36) என்பவரை கைப்பேசியில் அழைத்துள்ளாா். சிறிது நேரத்தில் அங்கு வந்த சிவதாஸூம், போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டாா். அவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிவதாஸ் தகாத வாா்த்தைகளால் பேசி காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டனைத் தாக்கிதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவதாஸ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.