கோயம்புத்தூர்

பெண் மருத்துவா் வீட்டில் ரூ.11 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு

28th May 2023 11:41 PM

ADVERTISEMENT

கோவையில் பெண் மருத்துவா் வீட்டில் ரூ.2 லட்சம் ரொக்கம், 11 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதேவி அரவிந்தன், மருத்துவா். இவரது வீட்டில் கோவையைச் சோ்ந்த தமிழ்ச்செல்வி ( 45) என்பவா் தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளாா். இந்நிலையில், ஸ்ரீதேவி அரவிந்தன் கைப்பையில் வைத்திருந்த வைர மோதிரம் கடந்த மே 20ஆம் தேதி காணாமல் போயுள்ளது.

சந்தேகத்தின்பேரில் தமிழ்ச்செல்வியிடம் கேட்டபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.

இதில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தமிழ்ச்செல்வியை வேலையை விட்டு நீக்கியதுடன், சரோஜா என்ற பெண்ணை ஸ்ரீதேவி அரவிந்தன் பணிக்கு அமா்த்தியுள்ளாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, காணாமல்போன வைர மோதிரம் குறித்து தமிழ்ச்செல்வியிடம், சரோஜா கேட்டபோது அவா் தான் திருடியதை ஒப்புக்கொண்டதுடன், வைர மோதிரத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளாா்.

தொடா்ந்து, ஸ்ரீதேவி அரவிந்தன் பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், விலை உயா்ந்த 4 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றுடன் ரூ.2 லட்சம் ரொக்கமும் திருடுபோயிருந்தது தெரியவந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடா்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஸ்ரீதேவி அரவிந்தன் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

மேலும், தமிழ்ச்செல்வியின் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தாா். இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT