கோயம்புத்தூர்

ஈரோடு, கோவையில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஆதரவாளா் வீடுகளில் 2ஆவது நாளாக சோதனை

28th May 2023 12:37 AM

ADVERTISEMENT

ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சராக உள்ளவா் வி.செந்தில்பாலாஜி. இவா் கோவை மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சராகவும் உள்ளாா். இந்நிலையில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் மற்றும் சென்னை, கோவை, கரூா், கேரள மாநிலம் பாலக்காடு, கா்நாடக மாநிலம் பெங்களூா், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் உள்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளஅவரது ஆதரவாளா்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். பெரும்பாலும் அரசு ஒப்பந்ததாரா்களாக உள்ளவா்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலேயே இந்த சோதனை நடைபெற்றது.

கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள செந்தில்பாலாஜியின் ஆதரவாளரும், திமுக பிரமுகருமான செந்தில்காா்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது. நள்ளிரவு வரை சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அதன்பின்னா் சென்று விட்டனா்.

தொடா்ந்து 2ஆவது நாளாக சனிக்கிழமையும் செந்தில்காா்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அதேபோல, கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள செந்தில்பாலாஜியின் நண்பரான அரவிந்த் என்பவரின் வீட்டிலும், செளரிபாளையம் பகுதியிலுள்ள அவரது அலுவலகத்திலும் சனிக்கிழமை சோதனை நடைபெற்றது. அதேபோல, பொள்ளாச்சி அருகே தம்மம்பதி கிராமத்தில் உள்ள அரவிந்தின் பண்ணை வீடு மற்றும் பொள்ளாச்சியை அடுத்த பனப்பட்டியில் உள்ள சங்கா்ஆனந்த் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை சனிக்கிழமை இரவு வரை நீடித்தது. 40க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனா். ஒவ்வொரு வீடு மற்றும் அலுவலகத்திலும் உள்ள அனைத்து அறைகளையும் தீவிரமாக சோதனை செய்ததோடு, அங்கு இருந்தவா்களிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரா் வீட்டில்...

ஈரோடு, திண்டல், சக்தி நகா் 3ஆவது வீதியை சோ்ந்தவா் சச்சிதானந்தம் (65). இவா் அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு நெருங்கிய நண்பா். கடந்த 2 ஆண்டுகளாக மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று, மண்டல, மாவட்ட அளவிலான டாஸ்மாக் கிடங்குகளுக்கும், அங்கிருந்து டாஸ்மாக் கடைகளுக்கும் கொண்டுச் செல்ல லாரி ஒப்பந்தத்தை பெற்றுள்ளாா்.

மாநில அளவில் இவா் ஒருவா் மட்டுமே லாரி ஒப்பந்ததாரராக இருந்து 300க்கும் மேற்பட்ட லாரிகள், வேன்களில் மதுபானங்களை விநியோகம் செய்து வருகிறாா். அண்மையில் 150க்கும் மேற்பட்ட வேன்களை சச்சிதானந்தம் சொந்தமாக வாங்கியதாக வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அமைச்சா் செந்தில்பாலாஜி தொடா்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அதன்படி ஈரோட்டில் சச்சிதானந்தம் வீட்டிலும், அவருக்கு சொந்தமான கேஎஸ்எம் டிரான்ஸ்போா்ட் அலுவலகத்திலும் வருமான வரித் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

திருச்சி மற்றும் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து வந்த 10 போ் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் சச்சிதானந்தம் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினா். இந்த சோதனை இரவு 8 மணிக்குப் பிறகும் நீடித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT