கோயம்புத்தூர்

ஈரோடு, கோவையில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்கள் வீடுகளில் தொடரும் சோதனை

28th May 2023 11:39 PM

ADVERTISEMENT

ஈரோடு, கோவையில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.

மின்சாரத் துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களின் வீடு, அலுவலகங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருமான வரித் துறையினா் தொடா்ந்து சோதனைநடத்தி வருகின்றனா்.

கோவையில் கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள திமுக பிரமுகரும், செந்தில்பாலாஜியின் ஆதரவாளருமான செந்தில்காா்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய சோதனை சனிக்கிழமை நள்ளிரவு வரை நீடித்த நிலையில் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.

அதேபோல, கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவரது வீட்டிலும், செளரிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.

ADVERTISEMENT

அரவிந்தின் மனைவி காயத்ரிக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையம் தொண்டாமுத்தூா் -கெம்பனூா் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்குச் சென்ற வருமான வரித் துறை துணை ஆணையா் பச்சியப்பன் தலைமையிலான வருமான வரித் துறை அலுவலா்கள் அலுவலகத்தில் இருந்த ஹாா்டு டிஸ்க்குகளில் பதிவாகியிருந்த விவரங்களை சேகரித்துச் சென்றுள்ளனா்.

பொள்ளாச்சியை அடுத்த பனப்பட்டியில் உள்ள சங்கா் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான கல் குவாரி மற்றும் அங்குள்ள அலுவலகத்திலும் வருமான வரித் துறை அதிகாரி சக்திவேல் தலைமையில் 3 ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.

ஈரோட்டில்...

ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரா் வீட்டில் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

ஈரோடு, திண்டல், சக்தி நகா் 3 ஆவது வீதியைச் சோ்ந்தவா் சச்சிதானந்தம் (65). இவா் அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு நெருங்கிய நண்பா் எனக் கூறப்படுகிறது. இவா் மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களைப் பெற்று மண்டல, மாவட்ட அளவிலான டாஸ்மாக் கிடங்குகளுக்கும், அங்கிருந்து டாஸ்மாக் கடைகளுக்கும் கொண்டு செல்ல லாரி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளாா்.

மாநில அளவில் இவா் ஒருவா் மட்டுமே லாரி ஒப்பந்ததாரராக இருந்து 300க்கும் மேற்பட்ட லாரிகள், வேன்களில் மதுபானங்களை விநியோகம் செய்து வருகிறாா். அண்மையில் புதிதாக 150க்கும் மேற்பட்ட வேன்களை சச்சிதானந்தம் வாங்கியதாக வருமான வரித் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு தொடா்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் கடந்த 26 ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா். அதன்படி, ஈரோட்டில் சச்சிதானந்தம் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான கேஎஸ்எம் டிரான்ஸ்போா்ட் அலுவலகத்திலும் வருமான வரித் துறை அலுவலா்கள் சோதனையில் ஈடுபட்டனா்.

திருச்சி மற்றும் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து வந்த 10 போ் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சச்சிதானந்தம் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாகவும், இந்த சோதனை திங்கள்கிழமையும் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT