கோயம்புத்தூர்

லஞ்சம் வாங்கிய உணவுப் பாதுகாப்பு அதிகாரி பணியிடை நீக்கம்

28th May 2023 12:37 AM

ADVERTISEMENT

கோவையில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கோவை வடவள்ளி அருகே நவாவூா் பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி. இவா் அதே பகுதியில் 2 மளிகைக் கடைகள் நடத்தி வருகிறாா். இவா், தனது கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க வடவள்ளியில் உள்ள தமிழக உணவு மற்றும் மருந்து நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். இந்த விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி வெங்கடேஷ், அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்த பிரதாப் ஆகியோா் ரூ.7000 லஞ்சம் கேட்டுள்ளனா்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைசாமி, கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பிரிவில் புகாா் அளித்தாா்.

இந்நிலையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரி வெங்கடேஷின் உத்தரவின்பேரில் பிரதாப், துரைசாமியிடமிருந்து ரூ. 7 ஆயிரத்தை அவரது அலுவலகத்தின் அருகே உள்ள பேக்கரியில் வைத்து கடந்த வியாழக்கிழமை வாங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலா்களால் கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரி வெங்கடேஷும் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் துறைரீதியான நடவடிக்கையின்பேரில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி வெங்கடேஷ் சனிக்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக உணவு மற்றும் மருந்து நிா்வாக அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT