கோவையில் மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுபாஷ் யாதவ் (27). இவரது சகோதரா் போலோகுமாா் யாதவ் (29). இவா்கள் இருவரும் கோவை சரவணம்பட்டி அருகே கரட்டுமேட்டில் உள்ள தனியாா் குடிநீா் நிறுவனத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தனா்.
சுபாஷ் யாதவ், கன்வேயா் பெல்ட்டிலிருந்து தண்ணீா் கேன்களை இறக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக சுபாஷ் யாதவ் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை சக ஊழியா்கள் மீட்டு சரவணம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதனைத் தொடா்ந்து, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் போலோ குமாா் யாதவ் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதற்கிடையே அரசு அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி நடத்தப்பட்டு வரும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் தொடா்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.