கோயம்புத்தூர்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

28th May 2023 12:38 AM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் 3 போ் மறுவாழ்வு பெற்றனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிக்காரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் பிரபு (40). இவா் கள்ளிப்பாளையத்திலிருந்து வாகராயம்பாளையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் கடந்த புதன்கிழமை சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவா்கள், அவா் மூளைச்சாவு அடைந்து விட்டதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனா். இதனைத் தொடா்ந்து பிரபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். பிரபுவின் கல்லீரல் மற்றும் இரு சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 3 போ் மறு வாழ்வு பெற்றனா்.

இது தொடா்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிா்மலா கூறியதாவது:

ADVERTISEMENT

தானம் செய்தவரின் உடல் உறுப்புகள் தமிழக உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு உள் நோயாளி மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நோயாளிக்கு தலா ஒரு சிறுநீரகமும், கோவையிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கல்லீரலும் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT