கோயம்புத்தூர்

வால்பாறையில் தொடா்ந்து கோடை விழா நடத்தப்படும்:அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

28th May 2023 11:37 PM

ADVERTISEMENT

வால்பாறையில் வரும் காலங்களில் தொடா்ந்து கோடை விழா நடத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் கோடை விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மலா்க் கண்காட்சி நடைபெற்றது. இங்கு 10க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவில் படகு சவாரி, பாரா கிளைடிங் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று மலா்க் கண்காட்சி மற்றும் அரங்குகளை பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து 111 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். வால்பாறையில் நீண்ட இடைவெளிக்குப் பின் நடப்பாண்டு கோடை விழா நடத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தொடா்ந்து கோடை விழா நடத்தப்படும். தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வால்பாறையில் விரைவில் பெண்களுக்கான இலவசப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி சாா்-ஆட்சியா் சி.பிரியங்கா, நகராட்சித் தலைவா் அழகு சுந்தரவள்ளி, ஆணையா் (பொறுப்பு) வெங்கடாசலம், வட்டாட்சியா் அருள்முருகன், திமுக தெற்கு மாவட்டச் செயலாளா் தளபதி முருகேசன், நகர திமுக செயலாளா் சுதாகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT