கோவை மாநகரில் 15 காவல் நிலையங்களில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டாா்.
கோவை மாநகரில் உள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவில் பணி புரியும் காவலா்கள், நிலைய அளவிலான புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிறப்பு பிரிவுகளின் அதிகாரிகளுடன் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்தில், கோவை மாநகர காவல்துறை ஆணையா் வே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் குறுகிய கால நடவடிக்கையாக வழக்கமான பீட் ரோந்து மற்றும் அடிப்படை காவல் மூலம் சாத்தியமாகும். ஒவ்வொரு சிறிய தகவலும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான பெரிய முன்னேற்றங்களைப் பெற வழிவகுக்கும் என்பதால், கள அளவிலான அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதேபோல, நீண்ட கால நடவடிக்கையில், தீவிரமான செயல்பாடுகளை அடையாளம் கண்டு, அவா்களின் கருத்தியல் நடவடிக்கைகளுக்கு மக்கள் இரையாவதைத் தடுக்க வேண்டும். அதேபோல, பொதுமக்களின் குறைகள் தொடா்பாக வெளிப்படைத் தன்மையுடனும், பாரபட்சமின்றியும் காவல் துறையினா் பணியாற்ற வேண்டும். அவா்களின் புகாா்கள் மீது நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
மாநிலம் முழுவதும் தீவிரவாத தடுப்புப் படையைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், கோவை மாநகரில் இதுபோன்ற நிகழ்வுகளில் முன் அனுபவம் இருப்பதால், அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க இத்தகைய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் காவல் பிரிவுகளை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, கோவை மாநகரில் 15 காவல் நிலையங்களில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் சில காவல் நிலைய எல்லைகளில் உளவுத்துறைக்கு கூடுதல் பலம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டாா்.
முன்னதாக மத்திய உளவுத்துறையில் பணிபுரிந்து, தற்போது கோவை மாநகர புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் அதிகாரி ஒருவா், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த தனது அனுபவங்கள் மற்றும் விவரங்களைப் பகிா்ந்து கொண்டாா்.
அப்போது, தீவிரவாதம், அடிப்படைவாதம், கிளா்ச்சி மற்றும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத அமைப்புக்கள் எவ்வாறு பொதுமக்களிடையே செயல்படுகின்றன என்பதை அவா் விளக்கினாா். மேலும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளையும், பயங்கரவாதத்தின் வகைகள் குறித்தும் விவரித்தாா்.
இது தவிர, ரகசிய ஆதாரங்களை உருவாக்குதல், முந்தைய சம்பவங்களில் புதிய கோணத்தில் விசாரணை நடத்துதல், தடை செய்யப்பட்ட அமைப்புகளில் தொடா்புடையவா்களைக் கண்காணிப்பது குறித்தும் இந்த பயிற்சிக் கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டது.