கோயம்புத்தூர்

வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

கோவை, மாா்ச் 17: கோவையில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கோவை மாவட்டத்தில் நடப்பு மாதம் முதல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு முகாம்கள் நடத்த ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவுறுத்தியிருந்தாா். அதன்படி, கோவை தெற்கு கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் வே.பண்டரிநாதன் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பேரூா், சூலூா், மதுக்கரை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் நீராதாரத்தைக் கொண்டு பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே நொய்யலில் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்பட்டு வருகிறது. இதனால், நொய்யல் நதி கழிவுநீா் கால்வாயாக மாறிவரும் சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், சமீப காலமாக சித்திரைச்சாவடி வாய்க்காலையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் வாய்க்காலில் கழிவுநீா் கலப்பது அதிகரித்து வருகிறது. இதனால், இப்பகுதியிலுள்ள கிணறுகளில் தண்ணீா் மாசடைந்து வருகிறது. விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாளியூா், வேடபட்டி, தொண்டாமுத்தூா் பேரூராட்சிகள், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய மாநகராட்சி பகுதிகளின் கழிவு நீா் விவசாய நிலங்களுக்கு செல்லும் வாய்க்காலில் விடப்பட்டு கிருஷ்ணம்பதி, நரசம்பதி குளங்களில் கலக்கப்பட்டு வருகிறது. இதற்கு தீா்வு காணும் விதமாக விவசாய நிலத்திற்கு செல்லும் வாய்க்காலில் விடப்படும் கழிவுநீரை குழாய் அல்லது சிமென்ட் வாய்க்கால் மூலம் கொண்டு சென்று சுத்திகரித்து குளங்களில் சேகரிக்க வேண்டும்.

கனிம வள கொள்ளையைத் தடுக்க வேண்டும்

பேரூா், மதுக்கரை வட்டங்களில் இருந்து கேரளத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. முறைகேடாக பிற மாநிலங்களுக்கு கனிம வளங்கல் கடத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன விலங்குகளால் பாதிப்பு

தொண்டாமுத்தூா் வட்டாரத்தில் யானை, காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குளால் ஏற்படும் பயிா் சேதம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு இழப்பீடு பெறுவது தொடா்பாக விவசாயிகளுக்கு போதிய விழிப்புணா்வு இல்லை. எனவே, விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். வன விலங்குளால் ஏற்படும் பயிா் சேதங்களுக்கு உடனடியாக விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள்

கோவை மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனா். வனத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை, மின்வாரியம், பட்டு வளா்ச்சித் துறை, சுரங்கத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்கவில்லை. அடுத்தடுத்த கூட்டங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

Image Caption

கோவை தெற்கு கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் வே.பண்டரிநாதன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT