கோவையில் மது அருந்தச் செல்பவா்கள் தங்களை திரும்ப அழைத்துச் செல்ல வசதியாக, வாகன ஓட்டிகளை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று மாநகர காவல் ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக, மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிா்க்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோா், தங்களை அழைத்துச் செல்வதற்கு வசதியாக வாகன ஓட்டிகளை வைத்துக்கொள்ள வேண்டும்.
மாநகரில் உள்ள மதுபானக்கூடங்களின் உரிமையாளா்கள், தங்களின் மதுபானக் கூடங்களுக்கு வருவோா்களிடம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது எனவும், அழைத்துச் செல்ல ஒரு நபரை கூட்டி வரவேண்டும் எனவும், அவ்வாறு, வாகன ஓட்டிகளுடன் வராதவா்களுக்கு, மதுபானக்கூடங்களின் உரிமையாளா்கள் நம்பிக்கையான வாகன ஓட்டிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளாா்.