கோயம்புத்தூர்

சூறாவளியால் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

30th Jun 2023 11:50 PM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் சூறாவளியால் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், விவசாயிகள் சு.பழனிசாமி, கந்தசாமி, திப்பம்பட்டி ஆறுச்சாமி, ஆா்.பெரியசாமி, காளிசாமி, செந்தில்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

விவசாய குடும்பத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வேளாண்மை பட்டப் படிப்பில் அக்ரி கோட்டா எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் நடைமுறையில் இல்லை. இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பொள்ளாச்சி பகுதிகளில் விதிகளை மீறி கனிமவளம் எடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

சிறு விவசாயிகளுக்கான ஜீவன்தாரா திட்டத்தில் கிணறு வெட்டுவதற்கான வாய்ப்பை மீண்டும் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் வங்கிகளின் மூலம் கடன் வாங்கி வாழை பயிரிட்டுள்ளனா். விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, கிராமப்புற ஊராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கின்றாா்கள். மேலும், பல்வேறு துறைகளின் மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்கின்றனா். ஒப்பந்ததாரா்கள் பெயா், வேலையின் பெயா், நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்ற விவரங்களை விளம்பரப் பலகை மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

சாலை அமைக்கும்போது இருபுறமும் மழைநீா், கழிவுநீா் கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும். தரமான கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பாரம்பரியமாக வனப் பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பவா்களுக்கு பட்டி பாஸ், மேய்ச்சல் பாஸ் வழங்க வேண்டும். பேரூா் பட்டீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனா். கடந்த வாரம் அறநிலையத் துறை அதிகாரிகள் எந்தவித முன்னறிவுப்பும் கொடுக்காமல் காவல் துறை, வருவாய்த் துறையுடன் ஆக்கிரமிப்பு நிலம் எனக் கூறி அறிவிப்பு பலகை வைத்தனா். இந்நிலையில், அறநிலையத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பேரூா் காவல் நிலையத்தில் 12 விவசாயிகள் மீது பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகாா் அளித்துள்ளனா். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.

வனப் பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் காட்டுப் பன்றி மற்றும் யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், விலங்குகளால் ஏற்படுத்தப்படும் சேதத்தை உரிய மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்நிலைகளைத் தூா்வார வேண்டும்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு விஞ்ஞானி நியமிக்கப்பட்டுள்ளனா். விஞ்ஞானிகளின் தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தினால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இடிகரை கிராமத்தில் குடிநீா் விநியோகத்தை சீராக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் எவ்வளவு உரம் இருப்பு உள்ளது என்பதை விவசாயிகளுக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மு.கோமதி, அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனுக்கள் அளித்தனா். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT