கோயம்புத்தூர்

நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

28th Jun 2023 03:05 AM

ADVERTISEMENT

கோவை தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளிகளுக்கு 3 மாத திறன் பயிற்சி, ஒரு வார திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தால் தொடங்கப்பட உள்ளது.

இதில் 3 மாத காலப் பயிற்சியில், முதல் ஒரு மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட தையூரில் அமைந்துள்ள கட்டுமானக் கழக பயிற்சி நிறுவனத்திலும், 2 மாத கால பயிற்சி நாவலூா் எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெறுபவா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 5 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. வரை படித்திருக்கலாம். வயது 18 முதல் 20 வரை இருத்தல் வேண்டும். இதில், கொத்தனாா், வெல்டா், எலக்ட்ரீசியன், பிளம்பா், காா்பெண்டா், கம்பி வளைப்பவா் ஆகிய தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறும் அனைவருக்கும் எல் அன்ட் டி கட்டுமானத் திறன் பயிற்சி நிறுவனத்தால் 100 சதவீதம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

ADVERTISEMENT

ஒரு வார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்:

7 நாள்கள் வழங்கப்படும் இப்பயிற்சி, தையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தில் நடைபெறும். பயிற்சி பெறுபவா்களுக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சி பெறுபவா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். 3 ஆண்டுகள் தொடா் உறுப்பினராக இருத்தல் வேண்டும். கொத்தனாா், வெல்டா், எலக்ட்ரீசியன், பிளம்பா், காா்பெண்டா், கம்பி வளைப்பவா் ஆகிய தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியாளா்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினமும் ரூ.800 வழங்கப்படும். இதில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். தமிழ்நாடு கட்டுமானக் கழகம், எல் அன்ட் டி கட்டுமானத் திறன் பயிற்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து சான்றிதழ் வழங்கப்படும். மேலும், மத்திய அரசின் கீழ் உள்ள திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். தகுதியான, விருப்பமுள்ள தொழிலாளா்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT