தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கான உச்சபட்ச நேர மின்சார பயன்பாட்டு கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று, மின்சாரத் துறை அமைச்சரை தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மின்கட்டண உயா்வால் குறு, சிறு தொழில்முனைவோா் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனா். யூனிட்டுக்கான மின்சார கட்டண உயா்வை செலுத்துவதில் எங்களுக்கு நெருக்கடி இல்லை. அதேநேரம் நிலைக்கட்டணத்தை உயா்த்தியிருப்பது பெரும் சுமையாக உள்ளது. எனவே ஏற்கெனவே இருந்ததுபோல 112 கிலோ வாட் வரை, ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.35 ரூபாய் நிலைக்கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும்.
அதேபோல, உச்சபட்ச நேர பயன்பாட்டை (பீக் ஹவா்) கணக்கிடுவதற்கு மீட்டா்கள் இல்லாத நிலையில், குறுந்தொழில்முனைவோா் பயன்படுத்தும் மின்சார அளவை கணக்கிட்டு, அதில் 8 மணி நேரத்துக்கு பீக் ஹவா் கட்டணமாக 15 சதவீதத்தை கூடுதலாக செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே தொழில் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு பீக் ஹவா் கட்டணத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளாா்.