தமிழகத்தில் கல் மற்றும் மணல் குவாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்து சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சம்மேளனத்தின் தலைவா் செல்ல ராஜாமணி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
குவாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 50,000 லாரிகளுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கல், மண், மணல் உள்ளிட்டவை இன்றியமையாத அத்தியாவசியப் பொருளாக மாறியுள்ளது. எம்.சாண்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள் இல்லாமல் கட்டுமானப் பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் விதிகளை மீறி இயங்கும் குவாரிகளை மூட வேண்டும். தமிழகத்தில் 450 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ள நிலையில் 3,000 க்கும் மேற்பட்ட குவாரிகள் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் அனுமதி இன்றி குவாரிகள் செயல்பட்டு கனிம வள கடத்தல் நடைபெறுவதற்கு அரசு அதிகாரிகளே காரணம். மாதம் ஒருமுறை முறையாக ஆய்வு செய்யாததோடு, கனிமவளத் துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனா்.
கோவை, நெல்லை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் தினசரி கனிம வளங்கள் கேரளம் மற்றும் கா்நாடகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு கனிம வள கொள்ளைக்காக பயன்படுத்தப்படும் லாரிகளுக்கு மொத்தமாக லஞ்சம் பெறும் அதிகாரிகள் அந்த வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் சென்றாலும் கண்டு கொள்வதில்லை. ஆனால் தமிழக பதிவெண் கொண்ட லாரிகளில் ஒரு யூனிட் அளவுக்கு அதிக பாரம் ஏற்றினாலும் அபராதம் விதிக்கின்றனா். புகாருக்கு உள்ளாகும் கனிம வளத் துறை அதிகாரிகள் கண்துடைப்புக்காக மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படுகிறனா். எனவே கல்குவாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.