கோவை லட்சுமி மில் சந்திப்பில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசல், சனிக்கிழமை மேலும் அதிகரித்து அவிநாசி சாலை ஸ்தம்பித்தது.
அவிநாசி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு இடங்களில் சிக்னல்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறைந்தது. என்றாலும் கல்வி நிறுவன வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில், கோவை லட்சுமி மில் சந்திப்பில் புதிதாக வணிக வளாகம் திறக்கப்பட்டதில் இருந்து மாநகர போக்குவரத்து போலீஸாருக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது.
அந்த தனியாா் வணிக வளாகத்துக்கு ஏராளமான வாகனங்கள் வரும் நிலையில், போதிய அளவுக்கு பாா்க்கிங் வசதி இல்லாததால் அங்கு வரும் காா்கள், இருசக்கர வாகனங்கள் யாவும் ராமநாதபுரம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்படுகின்றன.
இதனால் ஏற்கெனவே குறுகிய சாலையாக இருக்கும் ராமநாதபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை லட்சுமி மில் சந்திப்பில் இருந்து ராமநாதபுரம் நோக்கி இடதுபுறமாக திரும்பிச் செல்ல காா்கள், கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அந்த வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பைத் தாண்டி ரெட்பீல்டு சென்று புலியகுளம், ராமநாதபுரம் பகுதிகளுக்குச் செல்ல நேரிட்டது. லட்சுமி மில் சந்திப்பு, ரெட் பீல்டு பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பீளமேடு வரையிலும் அவிநாசி சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் அந்த சாலையை பயன்படுத்திய காா்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி ஆம்புலன்ஸ்கள், பேருந்துகளும் ஊா்ந்து செல்ல நேரிட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். அதேபோல ராமநாதபுரத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு வழியாக காந்திபுரம், சிவானந்தா காலனி வரை பேருந்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல் குறித்து காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) ஆா்.மதிவாணன் கூறும்போது, மேம்பாலப் பணிகள் காரணமாகவே அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடா்பாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, புலியகுளம் வழியாக ராமநாதபுரம் செல்லும் சாலையில் வழக்கமான போக்குவரத்தை உடனடியாக அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.