கோயம்புத்தூர்

கருணாநிதியின் நூற்றாண்டு விழா: ஜூன் 24இல் சிறப்பு மருத்துவ முகாம்கள்

18th Jun 2023 01:14 AM

ADVERTISEMENT

 

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கோவை மாவட்டத்தில் 6 இடங்களில் ஜூன் 24ஆம் தேதி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் ஜூன் 24ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, இந்த முகாமானது காரமடை அருகே தோலம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, கணுவாய் அரசு நடுநிலைப் பள்ளி, மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூா் ராம அய்யங்காா், குனியமுத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் அரசுப் பள்ளி, கண்ணம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய 6 இடங்களில் நடைபெறுகிறது.

முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மாா்பக புற்றுநோய் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளபடும்.

மேலும் பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகளிா் மற்றும் மகப்பேறு மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவா்களால் வழங்கப்பட உள்ளது.

அத்துடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுா்வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. எனவே இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொது மக்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சாா்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT