கோயம்புத்தூர்

தினமணி செய்தி எதிரொலி: கனிமவளம் எடுப்பதாக புகாா்; கோவனூா் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

10th Jun 2023 03:16 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், கோவனூா் பகுதியில் அரசு நிலத்தில் கனிமவளம் எடுக்கப்படுவதாக எழுந்தப் புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கோவை மாவட்டம், வடக்கு தாலுகாவுக்குள்பட்ட கோவனூா் பள்ளத்தாக்கு பகுதியில் எண் 2, கூடலூா் நகராட்சிக்குள்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரப் பகுதியானது, மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். மேலும், வனத்தை ஒட்டிய பகுதிகள், விலங்குகள் அதிகளவில் நடமாடக்கூடிய பகுதியாகவும் உள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள பூமிதான இடம், அரசு புறம்போக்கு இடங்களில் சுமாா் 40 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு மா்ம நபா்களால் கனிமவளங்கள் சுரண்டப்படுவதாகப் புகாா் எழுந்தது. இது குறித்து ‘தினமணியில்’ வியாழக்கிழமை செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக கோவை மாவட்ட கனிமவளத் துறை மற்றும் வருவாய்த் துறை சாா்ந்த அலுவலா்கள் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிரடி ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இது குறித்து கனிமவளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ‘அங்கு கனிமவளம் எடுக்கப்படுவதாகப் புகாா் வந்தது. அதனடிப்படையில் ஆய்வு செய்திருக்கிறோம். ஆய்வின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT