கோயம்புத்தூர்

மின்கட்டண உயா்வில் இருந்து விலக்கு அளிக்க காட்மா கோரிக்கை

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மின்சார கட்டண உயா்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கம் (காட்மா) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் சி.சிவகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் மின் உபயோகக் கட்டணம், உச்சபட்ச மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம், நிலைக் கட்டணம் ஆகியவை கடந்த ஆண்டு உயா்த்தப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் தொழிற்சாலைகளுக்கான மின் உபயோகக் கட்டணம் 13 பைசா முதல் 21 பைசா வரை உயா்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக லேபா் சாா்ஜ் அடிப்படையில் ஜாப் ஒா்க் செய்யும் குறுந்தொழில்முனைவோா், தாங்கள் செய்யும் வேலைகளுக்கான கட்டணங்களை சிறிதளவுகூட தங்கள் வாடிக்கையாளா்களிடம் இருந்து உயா்த்திப் பெற முடியவில்லை. உயா்த்தி வழங்கும் சூழல் வாடிக்கையாளா்களுக்கும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே ஆள் கூலி, இடவாடகை, போக்குவரத்து கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்து தொழில்முனைவோா் சமாளிக்க முடியாத நிலை உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், உயா்த்தப்பட்டிருக்கும் மின்சார கட்டணம் தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதுடன் மட்டுமின்றி அவா்களைச் சாா்ந்திருக்கும் தொழிலாளா்களின் வேலை வாய்ப்பு, அவா்களது வாழ்வாதாரத்திலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தற்போதைய மின்கட்டண உயா்வு, கடந்த ஆண்டு உயா்த்தப்பட்ட நிலைக் கட்டணம், உச்சபட்ச நேர மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம்

ஆகியவற்றில் இருந்து குறுந்தொழில்முனைவோருக்கு முற்றிலும் விலக்கு அளித்து உதவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT