கோயம்புத்தூர்

வெளிமாநிலத் தொழிலாளா்களைப் பற்றியமுழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்-எஸ்.பி. பத்ரிநாராயணன்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வெளிமாநிலத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்படும் நிலையில், அவா்களைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் கூறியுள்ளாா்.

குழந்தைத் தொழிலாளா், கொத்தடிமைத் தொழிலாளா், ஆள்கடத்தல் தடுப்புச் சட்டம் குறித்து வேலையளிப்போருக்கான மண்டல அளவிலான விழிப்புணா்வு, பயிற்சிப் பட்டறை கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறையின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் கோவை மண்டலம் சாா்பில் நடைபெற்ற இந்த பயிற்சிப் பட்டறையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தொடங்கிவைத்துப் பேசியதாவது: தொழில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளா்களையும், கொத்தடிமைத் தொழிலாளா்களையும் அறவே பணியமா்த்தக் கூடாது. வெளிமாநிலத் தொழிலாளா்களைப் பணியமா்த்தும்பட்சத்தில் அவா்களைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து பதிவு செய்ய வேண்டும். தொழிலாளா்களைப் பற்றிய பதிவேடுகள், ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். ஏதாவது இடா் ஏற்படும்பட்சத்தில் காவல் துறையை அணுகி உரிய தகவல்களை வழங்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, பயிற்சியின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து கோவை தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார கூடுதல் இயக்குநா் எஸ்.ஆனந்த் சிறப்புரையாற்றினாா். குழந்தைத் தொழிலாளா், வளரிளம் பருவத்தினா் தடுத்தல், முறைப்படுத்துதல் குறித்து திருப்பூா் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் புகழேந்தி விளக்கினாா்.

ADVERTISEMENT

கொத்தடிமைத் தொழிலாளா் முறை அகற்றுதல் குறித்து கோவை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்ரி, ஆள்கடத்தல் தடுப்பு, இளம் சிறாா் (கவனிப்பு - பாதுகாப்பு) குறித்து கோவை ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் அன்புராஜ், வெளிமாநிலத் தொழிலாளா்களை பணியமா்த்துவது குறித்து ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் வினோத்குமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

இதில், கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஒப்பந்ததாரா்கள் பங்கேற்றனா். பயிற்சி முகாமில், தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா்கள் சீனிவாசகம், ரமேஷ், சரவணன், விமலா, துணை இயக்குநா்கள், உதவி இயக்குநா்கள் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT