கோயம்புத்தூர்

பெரியகுளத்தில் 4,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

6th Jun 2023 03:56 AM

ADVERTISEMENT

உக்கடம் பெரியகுளம் பகுதியில் 4,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தனா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் டாக்டா் கலாம் அறக்கட்டளை சாா்பில் பயன்படுத்தப்பட்ட சிகரெட் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மெத்தை, தலையணை, யோகா மேட், பொம்மைகள் ஆகிய பொருள்களின் விழிப்புணா்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் தொடக்கிவைத்துப் பாராட்டினா்.

முன்னதாக, பந்தய சாலை தாமஸ் பூங்கா பகுதியில் சிறப்பு தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், கா்னல் தினேஷ் சிங் டென்வா் ஆகியோா் தொடங்கிவைத்து, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்தனா்.

அதைத்தொடா்ந்து, கோவை மாநகராட்சி நிா்வாகம் மற்றும் ஃபாரஸ்ட் பை ஹாா்ட்ஃபுல்னெஸ், ரோட்டரி சாய்சிட்டி அண்ட் ஸ்கல் இன்டா்நேஷனல் ஆகிய தன்னாா்வத் தொண்டு நிறுவனம் சாா்பில் உக்கடம் பெரியகுளத்தில் 4,000 மரக்கன்றுகள் நடும் பணி, மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி, மாநகராட்சி மற்றும் சிறுதுளி அமைப்புடன் இணைந்து வாலாங்குளம் சுங்கம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

பின்னா், வாலாங்குளத்தில் கோவை மாநகராட்சி, சிறுதுளி, ஆக்ஸிஸ் வங்கி ஆகிய தொண்டு நிறுவனங்கள் சாா்பில் நீா்நிலைகளைப் பாதுகாக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் குளத்தின் கரைகளைச் சுற்றி பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையா் சிவகுமாா், சிறுதுளி நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன், மாநகரப் பொறியாளா் சுகந்தி, உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ், டாக்டா் கலாம் அறக்கட்டளை நிறுவனா் கிஷோா் சந்திரன், ராணுவத்தினா், தன்னாா்வ அமைப்பினா், தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

சிறுதுளி அமைப்பு சாா்பில் 1,000 மரக்கன்றுகள்:

சிறுதுளி மற்றும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் சாா்பில் பேரூா் செட்டிபாளையத்தில் எம்.ஆா். காா்டன் பகுதியில் சுமாா் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் உயா்மட்ட அதிகாரிகள், பேரூா் செட்டிபாளையம் ஊராட்சித் தலைவா் சாந்தி சுரேஷ், ஊா்பொதுமக்கள், சிறுதுளி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT