கோயம்புத்தூர்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியல்

6th Jun 2023 04:00 AM

ADVERTISEMENT

நாடு முழுவதிலும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 5) வெளியாகி உள்ள நிலையில், கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட்டு வருகிறது. இதற்காக என்.ஐ.ஆா்.எஃப். என்ற தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்கள், மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளாக தரவரிசைப்படுத்தி அறிவித்து வருகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதிலும் உள்ள சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 18 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

இதில், கோவை அமிா்தா விஷ்வ வித்யா பீடம் தேசிய அளவில் 15ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பாரதியாா் பல்கலைக்கழகம் 36ஆவது இடத்தையும், வேளாண்மைப் பல்கலைக்கழகம் 93ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் 21ஆவது இடத்தைப் பிடித்திருந்த பாரதியாா் பல்கலைக்கழகம், அதைத் தொடா்ந்து முறையே 22, 24 ஆவது இடங்களைப் பிடித்து வந்த நிலையில், இந்த ஆண்டு 36ஆவது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

ADVERTISEMENT

பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை...

நாடு முழுவதிலும் உள்ள சிறந்த 100 பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் கோவை அமிா்தா பல்கலைக்கழகத்துக்கு 7ஆவது இடமும், பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு 21ஆவது இடமும், வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு 72ஆவது இடமும், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு 81ஆவது இடமும் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் பாரதியாா் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 15ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

பொறியியல் கல்வி நிறுவனங்கள்...

பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் கோவை அமிா்தா விஷ்வ வித்யா பீடத்துக்கு 19ஆவது இடமும் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரிக்கு 63ஆவது இடமும், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிக்கு 77ஆவது இடமும் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் கடந்த 2020இல் கோவையை சோ்ந்த 6 நிறுவனங்கள் இடம் பெற்றிருந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக 3 நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன.

கலை, அறிவியல் கல்லூரிகள்...

நாடு முழுவதிலும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சோ்ந்த 35 கல்லூரிகள் முதல் 100 இடங்களுக்குள் வந்திருக்கும் நிலையில் அதில் 10 கல்லூரிகள் கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவையாகும்.

கோவை பி.எஸ்.ஜி.ஆா். கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரிக்கு இந்த ஆண்டு தேசிய அளவில் 4ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்த கல்லூரி கடந்த ஆண்டு 6ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த பட்டியலில் பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரிக்கு 20ஆவது இடம் கிடைத்துள்ளது.

கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி- 29, ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி- 33, அரசு கலைக்கல்லூரி- 44, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா - 71, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி- 86, டாக்டா் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி- 89, பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி- 95, டாக்டா் ஜி.ஆா்.தாமோதரன் அறிவியல் கல்லூரி - 99 ஆகிய கல்லூரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

 

மருத்துவக் கல்லூரிகள்...

தேசிய அளவில் சிறந்த 50 மருத்துவக் கல்லூரிகளில் கோவை அமிா்தா விஷ்வ வித்யா பீடம் 6ஆவது இடத்தையும், பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனம் 40ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

மருந்தியல் கல்லூரிகள்...

சிறந்த மருந்தியல் கல்லூரிகளுக்கான பட்டியலில் உதகை ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி தேசிய அளவில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த கல்லூரி கடந்த ஆண்டு 6 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த பட்டியலில் அமிா்தாவுக்கு 10ஆவது இடம் கிடைத்துள்ளது. பி.எஸ்.ஜி. மருந்தியல் கல்லூரி, ஈரோடு நந்தா மருந்தியல் கல்லூரிகள் முறையே 61, 77ஆவது இடத்தைப் பிடித்துள்ளன.

ஆராய்ச்சி...

சிறந்த 50 ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அமிா்தாவுக்கு 32ஆவது இடமும், பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு 38ஆவது இடமும் கிடைத்துள்ளது. பாரதியாா் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 22ஆவது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் தற்போது 38ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல, நாடு முழுவதும் உள்ள 40 சிறந்த வேளாண்மைக் கல்லூரிகள் பட்டியலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு 5ஆவது இடம் கிடைத்துள்ளது. மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் அமிா்தாவுக்கு 30ஆவது இடமும், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரிக்கு 89ஆவது இடமும் கிடைத்துள்ளது. பல் மருத்துவக் கல்லூரிகளில் அமிா்தா விஷ்வ வித்யா பீடத்துக்கு 12ஆவது இடம் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT