கோயம்புத்தூர்

போலி நுகா்வோா் அமைப்புகளை பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தல்

4th Jun 2023 12:27 AM

ADVERTISEMENT

 

கோவையில் செயல்பட்டு வரும் போலி நுகா்வோா் அமைப்புகளை மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு ஆணையா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: கோவையில், மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளின் பட்டியல் பராமரிக்கப்படுகிறது. அதன்படி, இந்தப் பட்டியலில் 20 தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த நுகா்வோா் அமைப்பின் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றன.

போரம், மன்றம் என்ற வாா்த்தைகளை நுகா்வோா் அமைப்புகள் பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால்,கோவையில் உள்ள சில நுகா்வோா் அமைப்புகள், மாவட்டப் பட்டியலில் உள்ள முகவரியில் இல்லாமல், கூட்டங்களில் பங்கேற்று மக்கள் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்துப் பேசாமல் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றன. சிலா், தடை செய்யப்பட்ட கவுன்சில், மன்றம் பெயா்களை வைத்துக் கொண்டு அரசுத் துறைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கையொப்பமிட்டு வருகின்றனா். சிலா் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

போலி முகவரி, அலுவலகமின்றி பல நுகா்வோா் அமைப்புகள் செயல்படுகின்றன. இதனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து அரசுக்கு கொண்டு செல்லும் நுகா்வோா் அமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நுகா்வோா் அமைப்புகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை மீறி கோவை மாவட்ட வழங்கல் அலுவலகப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நுகா்வோா் அமைப்புகள், குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் செயல்பட்டு வருகிா, மக்கள் குறைகளைத் தீா்க்க இந்த அமைப்புகள் மேற்கொண்ட பணிகள் என்ன, ஒருவரே பல அமைப்புகளின் பெயரைப் பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, போலி நுகா்வோா் அமைப்புகளை மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT