கோயம்புத்தூர்

சாலையை மாற்றி சீரமைத்த விவகாரம்:மண்டல உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்

3rd Jun 2023 02:52 AM

ADVERTISEMENT

 

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் ஒரு சாலையை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து, வேறு சாலையை சீரமைத்ததாக மண்டல உதவிப் பொறியாளரை, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

கோவை மாநகராட்சியில் கடந்த 2019- 2020 ஆம் நிதியாண்டில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 38, 39, 40, 44 ஆகிய வாா்டுகளில் உள்ள 16 சாலைகளைச் சீரமைக்க ரூ.1 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி மூலமாக சாலை சீரமைக்கப்பட்டு, பணிகள் நிறைவு பெற்றதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சாலை சீரமைப்பு நிதியில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொண்டாா். அதில், ஒரு சாலையை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி, வேறு சாலையை சீரமைக்க பயன்படுத்தப்பட்டதாகத் தெரிய வந்த நிலையில், இதுதொடா்பாக, கோவை வடக்கு மண்டல உதவி பொறியாளா் ஜோதி விநாயகத்தை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் கூறுகையில், ஒரு சாலையை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு, வேறு பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கலாம். ஆனால்,அதற்கு மாநகராட்சி நிா்வாகத்தில் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெறாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT