கோயம்புத்தூர்

அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் வைத்தால்கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

3rd Jun 2023 02:57 AM

ADVERTISEMENT

 

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலைகள், மாநில நெடுஞ்சாலை சாலைகள், மாநகராட்சி சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்குச் சொந்தமான சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள், டிஜிட்டல் பேனா்கள், பிளக்ஸ் போா்டுகள், கொடிக் கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடா்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டு, அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு மாதத்தில் சுமாா் 185 அனுமதியற்ற விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஊராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகளை அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து முறைப்படி அனுமதி பெறப்பட வேண்டும். மேலும், விளம்பரப் பலகைகளை பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும், காவல் துறையினா் பரிந்துரையின்படியும் அனுமதி பெற வேண்டும்.

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உள்ளாட்சி அமைப்பினா், காவல் துறையினா் இணைந்து அகற்றுவதற்கு தனிக் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம், தெக்கலூா் - நீலாம்பூா் நெடுஞ்சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற காவல் துறையினா் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினா் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சூலூா் வட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமின்றி விளம்பரப் பலகை அமைக்கும்போது, இரும்புக் கம்பம் சரிந்து விழுந்ததில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, அனுமதியின்றி விளம்பரப் பலகை அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளா் மீதும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீதும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் வைத்தால் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளா், விளம்பர நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT