கோயம்புத்தூர்

கல்லூரி மாணவி மரணம் கொலை வழக்காக மாற்றம்: கணவா் உள்பட 3 போ் கைது

1st Jun 2023 02:33 AM

ADVERTISEMENT

கோவையில் மனைவியை கொலை செய்த கணவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவை, பேரூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிகாம் சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தவா்கள் சஞ்சய் மற்றும் ரமணி. இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சோ்ந்தவா்கள். காதலா்களான இவா்கள் கடந்த 23ஆ ம் தேதி வேளாங்கண்ணியில் திருமணம் செய்து கொண்டு மத்துவராயபுரம் குறிஞ்சி நகரில் சஞ்சய் வீட்டில் வசித்து வந்தனா்.

இந்நிலையில் சஞ்சய் அவருடன் கல்லூரியில் படிக்கும் வேறொரு மாணவியுடன் கைப்பேசியில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தது ரமணிக்கு பிடிக்காததால் இருவருக்கும் இடையே கடந்த 29ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய், ரமணியை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளாா்.

இதையடுத்து தனது தாய், தந்தையரை அழைத்து நடந்ததைக் கூறியுள்ளாா். பின்னா் மூவரும் சோ்ந்து ரமணி தற்கொலை செய்ய முயற்சித்ததாக நாடகமாடியுள்ளனா். பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரமணியின் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனா். அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவா் ரமணியை பரிசோதித்து அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளாா். இது குறித்து காருண்யா நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

ரமணியின் தந்தை கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். 30ஆம் தேதி கோட்டாட்சியா் விசாரணை முடித்து உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரமணி இறப்பில் சந்தேகம் இருப்பதால் அவரது கணவா் சஞ்சய், அவரது தந்தை லட்சுமணன், தாய் அம்முகுட்டி ஆகிய 3 பேரிடம் பேரூா் துணை காவல் கண்காணிப்பாளா் விசாரணை நடத்தினாா். இதில் ரமணியை கொலை செய்ததை சஞ்சய் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தாா். இதையடுத்து சஞ்சய், அவரது தாய், தந்தை ஆகிய 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT