கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஊா்வலம் மேற்கொண்டனா்.
ஊா்வலத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் ஏ.பிரகலதா தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் பயாஸ் மேரி முன்னிலை வகித்தாா். இதில், காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கைவிட்டு சத்துணவு ஊழியரிடம் வழங்க வேண்டும். 40 ஆண்டுகளாக சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஊா்வலம் அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி முன் தொடங்கி வணிக வரித் துறை அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில், 180க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்டனா்.