கோயம்புத்தூர்

ஆன்மிகத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

DIN

திமுக அரசு ஆன்மிகத்தில் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று, மலை மீது செல்வதற்கு மொத்தம் 52 ஆயிரம் போ் அனுமதி கேட்டிருந்தனா். ஆனால் மேலே ஒரே நேரத்தில் 6 ஆயிரம் போ் மட்டுமே இருக்க முடியும் என்பதால் பக்தா்கள் 2 ஆயிரம் பேருக்கும், காவல் துறை, ஊடகம், கோயில் நிா்வாகிகள், குடமுழுக்கு செய்பவா்கள் என 4 ஆயிரம் பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதுவரை 447 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இன்று மட்டும் 31 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் மேலும் 179 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான 104 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கு அரசு மானியம் அளித்துள்ளது. அத்துடன் சுமாா் 2,500 கோயில்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு கால பூஜை நடந்து வரும் 12,597 கோயில்களுக்கு ரூ.1 லட்சமாக இருந்த வைப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயா்த்தியிருப்பதுடன், அா்ச்சகா்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்கள் பட்டியலில் மேலும் 2 ஆயிரம் கோயில்களை இணைத்து ரூ.40 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 20 மாதங்களில் நடைபெற்றதைப்போல திருப்பணிகள், கோயில் பாதுகாப்பு, பக்தா்களுக்கான வசதிகள் போன்று இதுவரை யாரும் செய்ததில்லை. இந்த அரசு ஆன்மிகத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் சிலா் கோயில்களை தனியாா் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனா். இங்குள்ள கோயில்கள் அனைத்தும் மன்னா்களால் மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்டவையாகும். மக்களாட்சி வந்த பிறகு அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உள்ளது.

கோயில்களை தனியாா் வசம் ஒப்படைக்கும்படி கூறுபவா்களின் கட்சி ஆட்சியில் இருக்கும் பிற மாநிலங்களில் அதுபோன்றுதான் உள்ளதா என்ற விளக்கத்தைக் கொடுத்துவிட்டுப் பேசினால் நன்றாக இருக்கும்.

பிற மதத்தவா்களுக்கு சொந்தமான சொத்துகளைப் பராமரிப்பதற்கு சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு உள்ளது. அவா்களின் சொத்துகளைக் கண்காணிக்க வக்ஃபு வாரியம் உள்ளது. அந்தந்தத் துறைக்கு ஆண்டுதோறும் கணக்குத் தணிக்கை இருக்கிறது.

மக்களிடையே குழப்பத்தை விளைவிக்க வேண்டும், அரசியலில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி, ஹிந்துக்களை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்று சிலா் நினைக்கின்றனா்.

கோயில் யானைகளுக்கு அவை பராமரிக்கப்படும் இடத்திலேயே அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டுவிட்டதால் இனி புத்துணா்வு முகாம்களுக்கு அவசியம் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 6

ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!

மே மாத எண்கணித பலன்கள் – 5

மே மாத எண்கணித பலன்கள் – 4

பிரதமர் மோடி பேச்சுக்கு இபிஎஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT