சூலூா் விமானப்படை நிலையத்தில் உங்கள் படைகளை அறிந்து கொள்ளுங்கள் என்ற 2 நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொது மக்களிடையே இந்திய விமானப்படையின் ராணுவத் திறன் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும், நாட்டின் மாணவா்கள் மற்றும் இளைஞா்களை இந்திய விமானப்படையில் தங்கள் தொழிலாக தோ்வு செய்ய ஊக்குவிக்கவும், சூலூா் விமானப்படை நிலையம் ஜனவரி 20 மற்றும் 21ஆம் தேதிகளில் உங்கள் படைகளை அறிவோம் என்ற பெயரில் விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் எல்சிஏ தேஜாஸ் போா் விமானம், ஏஎன்32 போக்குவரத்து விமானம், எம்வி 17 வி5 மற்றும் ஏஎல்ஹெச் ஹெலிகாப்டா்கள் மற்றும் பவா் ஹேண்ட் கிளைடா் மூலம் விண்வெளி சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. இந்நிகழ்ச்சி சூலூா் மற்றும் கோவை மாநகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியை அரசு அதிகாரிகள், ராணுவம், கடற்படை மற்றும் இந்திய விமானப்படை வீரா்கள் தங்கள் குடும்பத்தினருடன் கண்டுகளித்தனா். இதில் இந்திய விமானப்படை வீரா்களின் செயல்திறன் பலத்த ஆரவாரத்தையும் பெற்றது. வெறும் 10 மீட்டா் இடைவெளியில் பறக்கும் விமானப்படையின் நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களுக்கு பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் இந்நிகழ்ச்சியின்போது சிறப்பு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விமானம், ரேடாா் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள் அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.