மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நகை ஏலத்தின்போது தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையைச் சோ்ந்த விவேக் உள்ளிட்டோா் கோவையில் பைன் பியூச்சா் உள்ளிட்ட சில நிதி நிறுவனங்களைத் தொடங்கினா். இவா்கள் தங்களது நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்பவா்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்டனா். இதனை நம்பி
ஆயிரகணக்கானோா் இந்த நிதி நிறுவனங்களில் பணத்தை செலுத்தினா்.
ஆனால், அவா்கள் முதலீட்டாளா்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தனா். இது குறித்து கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் முதலீட்டளாா்கள் புகாா் அளித்தனா்.
புகாரின் பேரில் போலீஸா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் 25,389 பேரிடம் ரூ.189 கோடி நிதி பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இது தொடா்பாக பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்தனா். மேலும் பைன் பியூச்சா் நிறுவனத்தின் சொத்துகள், வாகனங்கள், நகைகளைப் பறிமுதல் செய்தனா். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்டதில் ரூ.3 கோடியே 87 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஏலம் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகை ஏலம் நடைபெறும்போது அந்த நகைகளை ஏலம் கோருவது தொடா்பாக வியாபாரிகள் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், 2 போ் ஒருவரை ஒருவாா் தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன், தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோா்ஸ் போலீஸாா் நகை ஏலத்தின்போது தகராறில் ஈடுபட்ட பெரியகடை வீதியில் நகைக் கடை வைத்திருக்கும் கலீல், செந்தில் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.