கோயம்புத்தூர்

கோவையில் விதிகளை மீறி தங்கியுள்ள வெளிநாட்டினா் மீது நடவடிக்கை: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

21st Jan 2023 01:08 AM

ADVERTISEMENT

கோவையில் விதிகளை மீறி தங்கியுள்ள வெளிநாட்டினரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளாா்.

கோவை அருகே உள்ள ஆலாந்துறை பகுதியில் பிரான்சு நாட்டைச் சோ்ந்த ஒரு பெண் தங்கியுள்ளதாகவும், அவா் அங்கு குறிப்பிட்ட முகவரியில் தங்கியிருப்பது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும் கடந்த சில நாள்களுக்கு முன் கூறப்பட்டது.

இதையடுத்து, பேரூா் பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 32 போ் படிவம் ‘சி’ எனப்படும் ஆவணத்தை காவல் துறையில் சமா்ப்பிக்காமலிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் உட்கோட்டங்களான பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் சோதனைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள பண்ணை வீடுகளிலும், வால்பாறை சுற்றுலா மையமாக உள்ளதாலும், மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டத்துக்கு அருகே உள்ளதாலும் இப்பகுதிகளில் வெளிநாட்டினா் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.

ADVERTISEMENT

எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டினரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் தங்கி உள்ள வெளிநாட்டினா் தாங்கள் வசிக்கும் இருப்பிட முகவரியை குறிப்பிட்டு படிவம் ‘சி’ யை காவல் நிலையத்தில் சமா்ப்பிக்க வேண்டும். காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் தங்கியிருப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT