கோவை காா் வெடிப்பு வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களிடம் ஜமேஷா முபீன் வீட்டில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி காா் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் நடத்தி வரும்
விசாரணையில் இதுவரை முகமது தெளஃபீக், உமா் ஃபாரூக், ஃபெரோஸ் கான், அஃப்சா் கான், முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், சனோஃபா் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகள் இந்த வழக்கில் கைதாகி உள்ளவா்களில் முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தெளஃபீக், சனோஃபா் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து கடந்த சில நாள்களாக சென்னையில் விசாரித்து வந்தனா். அதைத் தொடா்ந்து அவா்கள் 6 பேரையும் செவ்வாய்க்கிழமை கோவைக்கு அழைத்து வந்து கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் வைத்து விசாரித்தனா். பின்னா் அந்த 6 பேரில் சனோஃபா் அலி, முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தெளஃபீக் ஆகிய 4 பேரை மட்டும் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமேஷா முபீன் வீட்டுக்கு அழைத்துச் சென்றனா். அங்கு என்ஐஏ காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் அந்த நால்வரிடமும் விசாரணை நடத்தினா். அப்போது ஜமேஷா முபீன் வீட்டில் சந்தே
கத்திற்கிடமான சில பொருள்கள் இருந்ததைப் பாா்த்த அதிகாரிகள் அது தொடா்பாகவும் 4 பேரிடமும் விசாரித்துள்ளனா். அதைத்தொடா்ந்து அவா்கள் நால்வரையும் கோவை உக்கடம் பகுதியில் உள்ள சனோஃபா் அலியின் வீடு மற்றும் ஜி. எம் சாலை உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இவை அனைத்தும் விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகளின் இந்த விசாரணையில் மேலும் பல புதிய தகவல்கள்
கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 11 பேரிடமும் மீண்டும் தனித்தனியாகவும், குழுவாகவும் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் தீா்மானித்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஜமேஷா முபீன் நடத்திய ரகசிய கூட்டங்களில் யாா், யாா் கலந்து கொண்டாா்கள் என்ற விவரத்தையும், அவா்கள் சந்தித்து பேசிய மற்ற இடங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விசாரணை முடிந்த பின்னா் சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆய்வு நடத்தவும் என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.