கோவை மாவட்டத்தில் 172 இறைச்சிக் கடைகளில் தொழிலாளா் துறையினா் மேற்கொண்ட சோதனையில் எடையளவில் முரண்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் மற்றும் காவல் துறையினா் உதவியுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரையிடப்படாத எடைளயவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகள், மறுபரிசீலனை சான்றுகாட்டி வைக்கப்படாமை, சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது தொடா்பாக சிறப்பு கூட்டாய்வு டிசம்பா் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.
இதில், 22 கடைகளில் வைக்கப்பட்டிருந்த எடைக் கற்களில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டன. அதே போல, 108 பேக்கரிகளில் சமையல் சிலிண்டா், பால் பொருள்கள் போன்றவற்றில் எடையுளவு சட்டம் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 11 கடைகளில் எடை முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், உரிமம் பெறாமல் சிகரெட் லைட்டா்கள் வைத்திருத்தல், சில்லறை விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்பனை குறித்து 34 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் 5 கடைகளில் உரிமம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கண்ட முரண்பாடுகள் தொடா்பாக சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.