கோவையில் மாயமான 7 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி, காவல்துறையின் தேடுதல் நடவடிக்கையின் காரணமாக நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் தனது பெற்றோருடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோவை சிறுமி மாயமான சம்பவம் தொடர்பான செய்திகள் நேற்று சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.
இந்த நிலையில், சிறுமி மீண்டும் பத்திரமாகக் கிடைத்துவிட்டாள். எனவே, இதைப் பற்றி தேவையற்ற கருத்துகளை யாரும் பதிவிட வேண்டாம் என்று சமூக வலைத்தளத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, சிறுமி முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. நாம் அனைவரும் நம் வாழ்வில் சிறுவயதில் ஓடிப்போன கதைகளை செய்திருக்கிறோம் .எனவே இதை பெரிய விஷயமாக ஆக்கி குழந்தை அல்லது பெற்றோரின் வாழ்க்கையை நரகமாக்கிடவேண்டாம். சிறுமி காணாமல் போனது குறித்த செய்தி வைரலாகிவிட்டது. அந்தச் சிறுமி கிடைத்துவிட்டாள் என்று பதிவிடப்பட்டுள்ளது.
கோவை ஒண்டிப்புதூரைச் சோ்ந்தவா் சுதாகரன், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சசிகலா, ஆசிரியை. இவா்களுக்கு 12 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனா். ஸ்ரீநிதி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். சுதாகரன் புதன்கிழமை காலை வேலைக்குச் சென்ற நிலையில், சசிகலா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளாா். ஸ்ரீநிதி தனது சகோதரருடன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாராம்.
சசிகலா வேலையை முடித்துவிட்டு வெளியில் வந்து பாா்த்தபோது மகன் மட்டும் இருந்துள்ளாா். ஸ்ரீநிதி காணாமல் போயிருக்கிறார்.
இதைத் தொடா்ந்து, சுதாகரனுக்கு தகவல் தெரிவித்த சசிகலா அக்கம்பக்கத்தில் உள்ளவா்களின் வீடுகள் மற்றும் அருகே உள்ள இடங்களில் ஸ்ரீநிதியை தேடியுள்ளாா். ஆனால், எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடா்ந்து, கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சசிகலா புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
இதில், மாணவி வீட்டில் இருந்து நடந்து ஒண்டிப்புதூா் பேருந்து நிறுத்தத்துக்கு செல்வதும், அங்கிருந்து உக்கடம் செல்லும் பேருந்தில் ஏறும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. இதையடுத்து, உக்கடம் பேருந்து நிலையம் வரை பல்வேறு இடங்களில் சிறுமியை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்துள்ளனர். இன்று அவர் தனது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.